எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.
இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.
ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.
நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது.