Thursday, August 12, 2010
பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்
இன்றைய உலக அரசியலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய தலைப்பாக பருவநிலைமாற்றம் உள்ளது. இன்றைய மிக முக்கிய அவசர அவசிய கேள்வியாக அனைவரின் முன் உள்ளது எதுவெனில் மனிதருடைய செயல்கள் பருவநிலை மாற்றத்தை மாற்றுகின்றதா? புவி வெப்பமாதல் உண்மையா? அப்படியென்றால் அந்த அளவுக்கு இயற்கை பேரழிவுகளை அடிக்கடி உண்டு பண்ணுமா? அப்படியானால் அதற்கேற்றாவறு நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது ஏற்படும் மாற்றங்களை குறைக்க முடியுமா? ஏற்படாமலே தடுக்க முடியுமா? ஏனென்றால் பூமியின் பருவநிலை முறை என்பதும் மிகவும் சிக்கலானது. அதை விட மனிதர்களுடைய போக்கும் எதிர் விளைவுகளும் அதைவிட இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகாண பல அறிவியல் அறிஞர்கள் சவாலாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.
மூன்று முக்கிய மாசுபடுத்தல் சம்பந்தமான விவாதங்கள் மக்கள் மனதில் அடிக்கடி தோன்றுகின்றன முறையே 1) புவி வெப்பமாதல், 2) ஓசோன் படலத்தில் ஓட்டை, 3) அமில மழை இந்த மூன்று அறிவியல்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாட்டில் ஏற்படும் மாசு காரணமாக வேறொரு நாடு பாதிக்கப்படுகின்றது. உலக மாசுபடுதலில் ஒரு மனிதன் அல்லது ஒரு நாட்டின் செயல்பாடு மற்ற எல்லா நாட்டு மக்களையும் பாதிக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இது உலக நாடுகளின் பிரச்சினை என்பதால் எல்லா நாடுகளும் இதற்கு தீர்வு தேட வேண்டியுள்ளது.
உலக அரசுகளின் குழுவான (Inter Governmental Panel on Climate Change-IPCC) 1988ல் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் கட்டம் நவம்பரில் ஜெனீவாவில் நடைபெற்றது. அது "அறிவியல் அறிக்கை" தயாரிப்பது பற்றியதாகும். முதல் அறிவியல் அறிக்கை மே மாதம் 1990 வெளியிடப்பட்டது. இதில் மார்கரட் தாட்சரின் பங்கு கணிசமானது.
இரண்டாவது உலக பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு 1990ல் ஜெனீவாவில் நடைபெற்றது. மேலும் 1992ல் ரியோடி ஜெனீரோவில் 160 நாடுகள் பங்கு பெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாடான "சுற்றுச் சூழலும் வளர்ச்சியும்" எனும் தலைப்பில் நடைப்பெற்றது (United Nation Conference on Environmental and Development (UNCED) இதில் ஏறத்தாழ 25000-திற்கும் அதிக அளவில் உலகத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இதையே Earth Summit என்று குறிப்பிடுகிறோம்.
எப்படி வானிலை அறிக்கை (Weather Report) முழுவதும் உண்மையாக இல்லாவிட்டாலும் வருவதை ஓரளவுக்கு முன்னரே கணித்துக் காட்டக்கூடியதாக இருக்கின்றதோ அதேபோல் பருவநிலை மாற்றம் பற்றிய கணிப்பையும் எடுத்துக் கொள்ளலாம். அறிவியல் பயிலாத அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது அதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
பருவநிலையில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா!
சுற்றுச் சூழலில் முக்கிய பிரச்சனையாக இருப்பது புவி வெப்பமடைதல் ஆகும். வானிலை நாளுக்கு நாள் மாறும் போது பருவநிலை மட்டும் எப்போதும் ஒரே சிராக அமைகிறது. ஒரு பருவ நிலைக்கும் மற்றொரு பருவநிலைக்கும் இடையில் வெப்பநிலையிலும் ஈரப்பதத்திலும் மனிதர்கள் உணரும் அளவிற்கு போதுமான மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுகிறது என்பது பொதுவான அறிவு. ஆனால் வானிலை போதுமான அளவுக்கு நிலைத்தன்மை உடையதாக இல்லாமல் ஏய்ப்பதாக அமைகிறது. 1962/63 மற்றும் 1981-82ல் நாம் எதிர்பாராத அளவு குளிர் நிலவியது. ரஷ்ய விவசாயிகள் மிகப்பெரிய பேரழிவையும், பஞ்சத்தை ஒரு வருடத்திலும், செழிப்பான விளைச்சலை மறுவருடத்திலும் ஏற்படுத்தி அதற்கு அடுத்த வருடமே பெரும் உணவு பற்றாக்குறையை சந்திக்க வைத்துக்கொண்டிருந்தது. வெவ்வேறு வெப்பநிலை ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியே பருவ கால மாற்றங்கள் ஏற்படுத்துவதால் இவை வானிலை அமைப்பில் முரணின்மையை (நிலைத்தன்மையற்றதாக) நிலைப்படுத்த முடியாமல் போனது மட்டும் இன்றி பருவகாலத்தையும் சிராக அமைக்க முடியவில்லை. 1920ல் இருந்து 1960 வரை ஏறக்குறைய ஒரு இணக்கமான அதற்கும் மேலாக ஒரு முன்கூட்டியே அறியும் அளவக்கும் பருவகால மாற்றம் இருந்ததால் விவசாயிகளுக்கு அது ஒரு பொன்னான செய்தியாக அமைந்தது.
1960-க்கு பிறகு மக்கள் பெருக்கம் எப்பொழுதும் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அப்பொழுதே அனைத்தும் மாற துவங்கியது. முன்னிருந்த அமைப்பு முறைகள் மாற்றப்பட்டன. பருவகால நிலைத்தன்மை மறைய ஆரம்பித்தது. அப்பொழுதே வானிலை ஆராய்ச்சியாளர்கள் பருவகால மாற்றத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் எனவும், இனி ஒருபோதும் 1920-ல் இருந்து 1960-வரை இருந்த இணக்கமான பருவ மாற்றம் ஏற்பட்டது என்று கருத்து தெரிவித்தனர்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட தொழில்சாலை மற்றும் வேறு சில நடவடிக்கைகளான காடுகளை அழித்தல் ஆகிய செயல்கள் அதிகரிக்கும் அளவில் நச்சுவாயுக்களை வெளியேற்றுகின்றன. மிக முக்கியமான கரியமிலவாயுவான CO2 புவியின் காற்று மண்டலத்தில் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் உமிழப்படும் கரியமிலவாயு சுமார் 7000 மில்லியன் டன்களாகும். இது ஏற்கெனவே உமிழப்பட்ட வாயுவோடு சேர்வதாலும், இன்னம் 100 வருடங்களுக்கு மேல் இந்த அளவு தொடரவிருப்பதாலும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் கரியமிலவாயு வெப்ப கதிர்களை தன்னுள் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இது புவியின் மேற்பரப்பில் ஒரு போர்வை போல செயல்பட்டு புவியை முன்பில்லாத அளவு வெப்பமாக வைக்கிறது. எனவே அதிக வெப்பமானது காற்று மண்டலத்தில் உள்ள நீராவியில் வெப்பத்தை அதிகரிக்கிறது. மேலும் புவியை வெப்பமடைய செய்கிறது. இதன் காரணமாக உலக வெப்பநிலை அதிகரிக்கிறது. அது பூலோக பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இந்நிலை தொடருமானால் 10 வருடங்களுக்கு ஒரு முறை புவியின் சராசரி வெப்பநிலை 0.25C ஆக உயரும் அல்லது 100 வருடத்தில் 2.50C ஆக உயரும் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உலகமயமானதின் விளைவாக அங்காடி விரிவடைந்துள்ளது. எனவே வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அதிக அளவு உற்பத்தி செய்ய விழைந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை அதிக அளவு தேவைப்படுகிறது. அதுமட்டும் இன்றி அதிக அளவு நிலக்கரி உபயோகப்படுத்தப்பட்ட காரணமான தொழிற்சாலையில் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளான ஆசிய நாடுகளின் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் பொருளாதார வளச்சியை அடையமுயல்கின்றன. ஆனால் இயற்கை வளங்கள் எப்பொழுதும் அளவாகவே கிடைக்கும் என்பது இயற்கை உண்மை. எனவே அவற்றை பயன்படுத்தி ஒரு சிரான பொருளாதார வளர்ச்சி காண்பது என்பது எதிர்காலத்தில் பெரிய கேள்விக்குறியான ஒன்று என்னும் உண்மையை அரசாங்கங்கள் அறிந்துள்ளன. இருப்பினும் மாற்று வழிகளை ஆராய அலட்சியம் காட்டப்படுகிறது.
M.S. சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிட்டதாவது ஆசியாவின் அரிசி உற்பத்தி 4% அளவுக்கு பருவகால மாற்றத்தால் குறையலாம் என்று கூறியுள்ளார். இது 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.கபில்சிபல் அவர்கள் இந்தியாவின் செயல்திட்டம் (Action Plan) பருவநிலை மாற்றத்திற்கானது. 2008-ல் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் தொழிற்சாலைகளில் குறைவான கார்பன் பொருளாதாரத்துக்கு விரைவாக மாறவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
ஆசியா மீது பருவகால மாற்றத்தில் ஏற்படுத்திய விளைவுகளின் அறிக்கையை அரசுகளுக்கு இடையிலான சபை வெளியிட்டது. அவை பின்வருமாறு,
* கடல் மட்டம் 40 சென்டி மீட்டர் அளவுக்கு 2100-க்குள் உயரும்.
* கடல் நீரால் பெருமளவிலான நிலப்பரப்பு மூழ்கடிக்கப்படலாம்.
* கடல் சார்ந்த நகர மக்கள் பாதிக்கப்படலாம்.
* நிலம் வீடு கடல் நீரால் மூழ்கடிக்கப்படலாம்.
* கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ள பவழப்பாறைகள் 80% அழிந்துவிடக்கூடும்.
வற்றாத ஜீவநதிகளான கங்கா, பிரம்மபுத்திரா நதிகள் வரண்டுபோகவும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை தெற்கு ஆசியாவில் 1.20 செல்சியசாக சராசரியாக 2040-ல் உயரும். இதைவிட இன்னும் அதிகமாவதற்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் வறுமை அதிகரிக்கலாம். கிராமப்புறங்களில் பசி தாண்டவமாடலாம். காரணம் விவசாயம் செய்வதற்கு நீர் கிடைப்பது என்பது பெரிய பிரச்சனையாகிவிடும். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் நோய்களால் ஏழை மக்களும் வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்படலாம். இதில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் அடங்குவர்.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் இந்தியா எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது.
இந்தியா இயற்கை எரிசக்திகளில் கவனம் செலுத்தாவிட்டால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும். இந்தியாவினுடைய எரிசக்தி (Energy) அதிகமாக நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒரிஸா, ஜார்க்கண்ட மற்றும் பீகாரின் கிராமப் புறங்களிலிருந்து கிடைக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இப்படி சுரங்கத்திற்கு நிலம் எடுக்கப்படுவதால் அடித்தட்டு மக்களே அதிகம் பந்தாடப்படுகிறார்கள். இந்த சுரங்கங்களிலும் அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுகளிலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. இப்படி உற்பத்தியாகும் எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் பெரும்பாலான இரும்பு ஆலைகளுக்கும் அலுமினிய உற்பத்திக்கும் செலவிடப்படுகின்றது இதன் மூலம் உற்பத்தியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் யோசிக்கவைக்கின்றது. (சினா மற்றும் அமெரிக்கா இன்னும் சில நாடுகள்) பங்களாதேஷ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும். எரிசக்தியை சூரியன், காற்று மூலம் பெறவேண்டும் அதிக வெப்பம் தாங்கி விளையும் பயிர்களையும் கடல் உப்புநீர் பாதித்த நிலங்களையும் உற்பத்திக்கு பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இயற்கை எரிவாயுக்களை இந்தியா பாதுகாத்தல்
IPCC அறிக்கை தயாரிப்பில் ஈடுப்ட்டவர்களில் 20 பேர் இந்திய அறிவியலறிஞர்கள். மக்கள் தொகை வளர்ச்சியும் சரியான திட்டமிடல் இல்லாததும் இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்துகின்றன. அதிக அளவு "மாசு" ஏற்படுத்துவது என்று பார்த்தால் அமெரிக்காவே முதலாவதாக வருகிறது.
IPCC Report தயாரிப்பில் ஈடுபட்ட 20 அறிஞர்களும் அமெரிக்க உதவி ஜனாதிபதியான அல் கோருடன் இந்த ஆண்டு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நமக்கு தெரியும் வெள்ளமும் வறட்சியும் இனி வரும் கலங்களில் அதிகரிக்கும் ஆனால் மக்கள் இவ்விரண்டிலும் பாதிப்பு ஏற்படும் இடங்களில் குடியிருப்பது தான் கொடுமை. இந்தியா 4-லிருந்து 5 சதவிகிதமாகவும் உலக நாடுகளில் மாசு செய்யும் இடத்தில் இந்தியா முதல் 10-ல் வருகிறது. அமெரிக்கா 20-25% மாசு ஏற்படுத்தி முதலாவதாக வருகிறது.
பிரதிபலிப்பு
அறிவியல் அறிஞர்கள், இவை அனைத்துக்கும் மனித நடிவடிக்கையே காரணம் என்று கூறும் நிலையில் அரசியல்வாதிகளும் மற்ற முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களும் செலவுகளை கருத்தில் கொண்டு பருவகால மாற்ற எச்சரிக்கையை எதிர்கொள்ள நடிவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு சில நடிவடிக்கைகளை மிக குறைந்த செலவில் செய்ய இயலும் மற்றும் சுலபமாகவும் செய்ய முடியும். உதாரணமாக சக்தியை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற முன்னேற்ற திட்டங்கள் மற்றும் வேறு சில திட்டங்களான காடுகள் அழிப்பதை குறைக்கும் நடிவடிக்கை மற்றும் மரங்களை நடுதல் ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகும்.
இவைமட்டும் அல்லாமல் மற்ற சில செயல்களான கரியமில வாயுவை வெளிவிடாத சக்தி வகைகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தல் அதாவது திரும்ப பயன்படுத்த முடிகின்ற சக்தி வகைகளான பயோமாஸ், நீர், காற்று அல்லது சூரிய சக்திகளை வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் சாத்தியமும் உள்ளது. தற்சமயம் எது முக்கியம் எனில், எதிர் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்சமயம் திட்டங்கள் தீட்ட தயாராகிக் கொள்வதுதான். என்வே எதிர்காலத்தில் நல்ல நீர் மற்றும் பற்றாக்குறை இல்லாத உணவு அளிப்பு ஏற்பட இப்போது இருந்தே நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மூலம்: உலக சக்தி ஆலோசனை சபை
Labels:
Technology
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment