ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு நடைபெறும் என அறிவித்தார். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் நொபாரு கராஷிமா, தமிழக முதல்வரின் அவசரங்களுக்குப் பணிந்துவிடாமல், "2011, ஜனவரியில் நடத்திக்கொள்ளலாம் கால அவகாசம் போதாது" என ஒப்புதல் அளிக்கவில்லை. கருணாநிதி அதனிடத்தில் முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு அறிவிக்கிறார். இதற்கு எதிர்வினையாக, 23.9.2009ல், தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது. சென்னை எழும்பூரிலுள்ள இக்ஷா மையத்தில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் மட்டுமே. முன்பதிவு செய்யப்பட்ட அறையை, நிர்வாகத்தை மிரட்டி ரத்து செய்து, கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தது காவல்துறை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு முடிவுகளில் ஒன்றாக, மாநாடு எங்கு நடைபெற உள்ளதோ, அந்த கோவை நகரில் 4.10.09 அன்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பெற்றது. நடத்தியதற்கு ஒருங்கிணைத்தவர்களையும், அனுமதியளித்த ரூபி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினையும் காவல்துறையும் கல்வித் துறையினரும் இணைந்து உண்டு இல்லை என ஆக்கினர்.
செம்மொழித் தமிழ் மாநாடு எதிர்ப்பு என்ற பெயரில், நேரடியாக எந்த அமைப்பும் சிறுநிகழ்ச்சியையும் நடத்த இயலவில்லை. தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பு, சென்னையில் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - விளக்கப் பொதுக்கூட்டம்" ஒன்றினை நடத்தமுயன்றது. புலவர் புலமைப்பித்தன், தியாகு, புலவர் இறைக்குருவனார், எழுத்தாளர் சூரியதீபன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு முந்திய நாள் ஏற்பாட்டாளரை அழைத்து அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தனர் காவல்துறையினர். அனைத்து இடங்களிலும் முளையில் கிள்ளி எறியும் கொள்கையை காவல் துறையினர் தீவிரமாகக் கடைபிடித்தனர். எதிர்ப்புக்கெனவே உருவாக்கப்பட்ட, தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பும் தமிழ்மலர் 2010 நூல் வெளியீடு என்ற இன்னொரு பெயரில் ஒளிந்துகொண்டு, கோவை 13.6.2010ல் ஒரு நிகழ்வை நடத்தியது.
"தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு மாநாட்டு அவசரத்தில் இருக்கிறார். அந்த அவசரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எப்படி நடத்த வேண்டுமென்கிற முறைமையைப் புறந்தள்ளி, ஒரு கட்சி மாநாட்டை நடத்துவதுபோல் அறிவிப்பு செய்தார்... முதலாவது செம்மொழி மாநாட்டினை நடத்த முடிவு செய்ததில், தமிழ் ஆய்வு பற்றிய அக்கறையோ, செம்மொழி குறித்த நேர்மை உணர்வோ இல்லை. ஒரு மாநாட்டுக் கொண்டாட்டத்துக்கான ஆர்வந்தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. அதற்கும் மேலாக ஈழத் தமிழர் பிரச்சனையில் உலக அளவில் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஒரு மாநாடு" என விளக்கி, 1.11.2009ல், தமிழ்ப்படைப்பாளிகள் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில், "தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் நான்கு பக்கமுள்ள ஒரு கடிதம் அனுப்பினோம். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து, உலகெங்குமுள்ள தமிழறிஞர்களுக்கு, ஏறத்தாழ இருநூறு பேருக்கு மின்னஞ்சல் செய்திருந்தோம்.
அனுப்பப்பட்டவர்களில் உலகத் தமிழாராய்ச்சிக் குழுவின் தலைவர், ஜப்பானிய தமிழறிஞர் நொபாரு கராஷிமா, பிரான்சின் தமிழறிஞர் பேரா.பிரான்காய்ஸ் குரோ (Prof.Francois Gros) போன்ற சிலர் வருகை தரவில்லை. பின்லாந்தின் அஸ்கோ பாப்லோ, பேரா.கா.சிவத்தம்பி போன்ற பலர் பிறநாடுகளிலிருந்து வந்து மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் நினைவு கூர்ந்து மாநாட்டுக்கு ஒரு மாதமிருக்கும். மீண்டும் மின்னஞ்சலில் அனுப்பினோம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலுமுள்ள தமிழறிஞர்களுக்கு நான்கு பக்க வேண்டுகோள். 500 பேருக்கு மேல் அஞ்சலில் அனுப்பப்பட்டது. முன்னெதிர்ப்புகள், தமிழக அளவில் சிலவும், இணைய தளங்களில் பரவலாகவும் எடுக்கப்பட்டன.
இத்தகைய முன்கூறல்களைத் தாண்டி, தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர். நடைபெற்றது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு அல்ல. முதலாவது செம்மொழித் தமிழ்மாநாடு - கலந்துகொள்வதில், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தருவதில் என்ன தவறிருக்க முடியும் என்ற சமாதானத்தை கலந்துகொண்டவர்கள் தமக்காக வைத்திருக்கலாம். அத்தகைய சமாதானத்துக்கும் பங்கேற்பு விருப்புக்கும் பின்னால் செயல்பட்ட அதிகார அழுத்தத்தையும், அறிவின் வன்முறையையும் காணத் தவறக்கூடாது.
அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநாட்டு ஆதரவு கட்டியமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழ் மாநாட்டு அறிவிப்பைச் செய்தவுடன், பா.ம.கவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாநாட்டில் பங்கேற்போம் என முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். இது கூட்டணி உருவாதற்கான அரசியல் உத்தியாகப் பார்க்கப்பட்டது. இக்காலத்தின் எந்த அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள், மக்கள் என்ன கருத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றறியும் சனநாயக முறையைக் கைவிட்டதால், மேலிருந்து முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை கொண்டு இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாடு எடுக்குமுன் தனது கலை இலக்கியப் பெருமன்றத்தினரிடம் ஆலோசனை கலக்காமல் கண் தன்மூப்பாய் முடிவெடுத்தது. ஆனால், "இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்குத்தான் செய்த துரோகத்தை மறைப்பதுதான். அதனுடைய நோக்கம் உயர்வானதல்ல" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஒரு நேர்காணலில் (16.5.2010) அறிவித்தார்.
இந்த ஆண்டு (2010) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கவிஞர் புவியரசு "அது செம்மொழி மாநாடோ, உலகத் தமிழ்மாநாடோ இல்லை. அது தி.மு.க.மாநாடு, நான் அதில் எந்த வகையிலும் பங்கேற்க மாட்டேன்" என்று கோவை மண்ணிலிருந்து அறிவித்தார். இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதி தொடர்பு கொண்டு சென்னை சங்கமத்துக்குள் கவிஞரை இழுக்க முயன்றபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மாநாட்டுக்குமுன் கவிஞர்கள் இன்குலாப், இளம்பிறை, மாலதி மைத்ரி, சி.மோகன் போன்றோர் கவிதைகளும், மாநாட்டுக்குப்பின் சுகிர்தராணியின் கவிதையும் எதிர்ப்பைப் பேசின. சூரியதீபன், வெளி.ரங்கராஜன் போன்றோரது கட்டுரைகள் எதிர்ப்பை மையம் கொண்டு வெளிப்பட்டன.
எதிர்கட்சிகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க. தேர்தல் உத்தி அடிப்படையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தன. தமழ்த் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள், தமிழின அமைப்புக்கள், போன்றவர்தாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இயங்கினர்.
முத்தமிழறிஞருக்குப் புகழாரம் சூட்ட தமிழறிஞர்கள் முண்டியடித்த கோவை மாநகரில் பிப்ரவரி, 6, 7 நாட்களில் புதிய தமிழகம் கட்சியின் க.கிருஷ்ணசாமி. "உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு" நடத்தியதை அரசு விரும்பவில்லை. கருணாநிதியின் உலகத் தமிழ்நாயகன் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு அது. மாநாட்டை நடத்தவிடாமல் செய்ய மாவட்ட நிர்வாகமும், முதல்வரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகினர். சனவரி 15ல் காவல்துறை மாநகர ஆணையர் அனுமதி மறுத்தார். கருத்துரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு ஏற்பாட்டாளர் உயர்நீதிமன்றம் வரை சென்றார். மாநாடு நடத்த ஆறு நாட்கள் இருந்த நிலையில், உயர்நீதி மன்றம் மறுபடியும் விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளருக்கு, ஆணையிட்டு, அனுமதிக்கு வழிகாட்டியது. மாநாடு நடைபெற இரண்டு நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் அனுமதி கிடைத்தது. செம்மாழித் தமிழ்மாநாடு முடியும்வரை, சிறு முனகல்களைக் கூட கேட்கவிடாமல் கருத்துரிமை காத்தார் கருணாநிதி. அரசியல் தளத்தில் சிறு அசைவும் எழாமல் பார்த்துக்கொண்டு தமிழறிஞர்கள் (கா.சிவத்தம்பி உட்பட), கலை, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் வட்டாரத்தை மிகக் கவனமாக தன்பக்கம் நிறுத்துவதில் முன்னேறினார் கனிமொழி.
ஏற்கனவே இலக்கிய உலகில் அப்பாவுக்கு மதிப்புத் தராத இலக்கிய வட்டாரத்தினர் மத்தியில்தான், தேடிக் காத்துவைத்த மதிப்பை பயன்படுத்திக் கொண்டார். உடல்நலமின்மை, அப்போலா மருத்துவமனைச் செலவு என்ற காரணஙகளால், இவருடைய அறிவுவட்டத்துக்குள் முதலில் அடைக்கலமானார் எழுத்துப்புலி ஜெயகாந்தன். சிந்தனையாளர், ஆய்வாளர் என்ற அடையாளமும் நேசமான அணுகுமுறையும், அரசியல் வன்முறை- அறிவு வன்முறை இணைவாய் செயல்பட்டு, தமிழின உணர்வோடு இருந்த சிலரையும் தின்று தீர்த்திருந்தன.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்த கடந்த 30 ஆண்டுகளாய்த் தவறினார் என்று விமரிசித்தவர்கள்கூட, கோமானுடன் எதற்கு பிணக்கு என்று அச்சம் மேலேற இணைந்தனர். அரசியல் அதிகாரத்தின்முன் அறிவின் கம்பீரங்கள் மண்டியிட்டதை நேரிலேயே கண்டோம். ஆட்சியதிகாரத்தில் இல்லாமலிருந்து இது போன்றதொரு மாநாட்டை நடத்தியிருந்தால், தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக முந்நாள், இந்நாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் போல் ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றார்கள்.
"இம்மாட்டில் எத்துறைகளில் ஆராய்ச்சி நிகழும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கும் எவ்வாறான வழிகளை இம்மாநாடு சுட்டிக் காட்டப்போகிறது?"- சென்னையில் 1968ல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை நோக்கி பேரா.நா.வானமாமலை எழுப்பிய கேள்விகள், 1968, 1981, 1995 - என்று மூன்று பெரும் உலகத் தமிழ் மாநாடுகளும், செம்மொழித் தமிழ் மாநாடு முடிந்தபின்னும் பதில் அளிக்கப்படாமலே உள்ளன. எவ்வெத்துறைகளில் ஆராய்ச்சி வலுப்பெற வேண்டும் என்ற திட்டமிடல் இன்று கட்டுரைகள் பெறப்பட்டன. அவரவருக்கு எது சாத்தியப்படுமோ, அந்த வகையில் அவரவர் விருப்பத்துக்கேற்ப கட்டுரை தயாரித்திருந்தனர். ஆய்வரங்கில் கலைஞரின் பேச்சுக்கலை, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் உரைத்திறன், கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக்கூறுகள், கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை என்றெல்லாம் 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதிலிருந்து ஆய்வரங்கத் தரத்தைக் கணித்துக் கொள்ளலாம். கனிமொழியின் இலக்கிய ஆளுமை பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. விமர்சகர்கள், ஆய்வாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கு கட்டுரை வாசித்தவர்கள் பதில் சொல்ல இயலாமல் திணறியிருக்கிறார்கள். ஆய்வரங்கத்தில் பங்கேற்ற பலரும் கட்டுரையில் அல்லது தமது பேச்சின் ஒரு ஓரத்தில் கருணாநிதிக்கு நன்றி பாராட்டத் தவறவில்லை.
"பொது அரங்கில் ஒரே காக்காய் சத்தம்" என்று சுட்டிக் காட்டினார் ஒரு இதழாளர் (தினமணி 27.6.2010). கேலி செய்து விமர்சிக்கக் கூட ஒரு இதழுக்குத் துணிவு வந்தது ஆச்சரியம். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அத்தனை கவனிப்பு. கவியரங்கப் பாட்டாளர்கள் கருணாநிதி புகழ்பாடினர் கருத்தரங்க உரையாளர்களும் அவ்வாறே. பட்டிமன்ற டமாரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
திராவிட முன்னேற்றக்கழகம் துவங்கப்பட்டபோது இருந்த மூத்த தலைவர்களில் அண்ணா, கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவர்கள் பெயரும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஒவ்வொருவராய் காலமாகிவிட, இன்று மிஞ்சியிருப்பவர் இனமானப் பேராசிரியர் என்றழைக்கப்படும் க.அன்பழகன். எதிரில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கருணாநிதியைச் சுற்றி இவர்கள் நாக்கு ஓடியதேயன்றி, பக்கத்தில் அமர்ந்த பேராசிரியரை எவரும் கண்டுகொள்ளவில்லை. 95 சதவீதம் பேர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் உச்சரித்தார்கள். ஒரு ஐந்து சதவீதம் பேர் பேராசிரியர் பெயரைக் குறிப்பிட்டது, முகத்தாட்சண்யத்துக்காக என்பதுபோல் இருந்தது.
மன்னர் எதிரில் அமர்ந்திருக்க, வயிற்றுப் பசிக்கும், வாழ்வுக்கும் கையேந்திய முன்னைய புலவர்கள்போல் புகழாரம் சூட்டினார்கள். முந்தைய அடிமை முறை உயிர்கொண்டு இயங்கியது.
"நீர்கூட்டும் ஆறுகளின்
சமுத்திரச் சங்கமத்தை
யார்கூட்ட முடியும்?
நீர்கூட்ட முடியும்! கலைஞரே
நீர்கூட்ட முடியும்"
என்று முதல்காக்கையாக அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
"முத்தமிழ்க்கலைஞர் பிறந்த நாள்
ஜூன் மூன்று
செம்மொழி தினமாக அறிவித்து
கொண்டாடி மகிழ்வோம்"
என்றார் ஆண்டாள் பிரியதர்ரினி.
நேரடியாக அறிவை விற்பதால் அவர்களுக்கொரு அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனால் எதிரில் அமர்ந்து, இதையெல்லாம் ஏற்று நிலப்பிரபுத்துவ முறையின் குணாம்சத்திலிருந்து சற்றேனும் விலகாத ஒரு ஜீவனாய் கருணாநிதி ரசித்துக்கொண்டிருந்தார்.
ஈரோடு தமிழன்பன் வந்தார்.
"பூக்கள் காண்பவரின் கண்களுக்காகப் பூக்கின்றன.
எம் கவிதைகள்
கண்களை நம்பிப் பூப்பதில்லை
கலைஞரை நம்பிப் பூக்கின்றன".
ஈழப்போர் கொடுமைகள் கண்டு கொதிப்புற்று உயிர்நீத்த முத்துக்குமார் பற்றி-
"முத்துக்குமார் கடிதத்தில் ஆங்காங்க
சிங்க நகங்கள்" என்றார். எதிரே அமர்ந்து கேட்கும் சிங்கத்துக்கு, நிகழ்காலத்தில் பிடிக்காத ஒரு சொல் முத்துக்குமார். அவருக்கு பிரியமான புகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்ட தமிழன்பன், பிடிக்காத ஒருவரை ஏன் குறிப்பிட்டார் என இதுவரை விளங்கவில்லை.
கையில் வேப்பிலை கொண்ட அருள்வந்த சாமியாடிபோல், கவிதை எடுத்து ஆடினார் வைரமுத்து.
"பூமி இடிஇடிப்பதை வானம் கேட்கட்டும்
எங்கே கலைஞருக்காக ஒருமுறை கைதட்டுங்கள்
வானம் கேட்கட்டும்" என்றவர் கருணாநிதியை ஒரு ஜீவநதியாக வருணித்து, அவரது அரசியல் வாரிசுகளை கிளை ஆறுகளாய் கற்பித்து,
"அரசாளப் போவதும் இந்த ஆறு
இது வரலாறு"
என்று பாரம்பரிய ஆட்சிமுறையை வரவேற்றார்.
"கிளம்பிற்றுகாண் சிங்கத்தமிழர் கூட்டம்" என்பது கவியரங்கப் பொதுத் தலைப்பு. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சிங்கக் கூட்டம் கிளம்பிய வேகம் கண்டு, காது கேட்காத தொலைவில் போய் நின்று அவ்வப்போது சிலர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினர்.
"பனையோலையில் கணினித் தமிழ் எழுதிய
இக்காலத்து இளங்கோ நீ"
பாடினார் தமிழச்சி. இதுகாறும் அவர் படைத்த கவிதைகளும், அவைகளுக்குள் ஒளிந்திருக்கும் ஊற்றும் எல்லாமும் இந்தப் புளுகுநதியில் அடித்துச் செல்லப்பட்டன. இதற்குப் பரிகாரம் செய்வதுபோல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து 2010 ஜூலை தீராநதியில் மே18, 2010 என்று ஒரு கவிதையை எழுதியுள்ளார் தமிழச்சி. இதிலிருந்து இந்தக் கவிஞர்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் கணிப்பு, இவர்கள் "கல்யாணத்திற்கு ஒரு கவிதை, கருமாதிக்கு ஒரு கவிதை" தயாராய் வைத்திருப்பார்கள் என்பதுதான்.
அதிகாரம் கோலோச்சுகிற இடத்தில் யார் என்ன கோலம் கொள்வார்கள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப, வாழ்நிலையிலிருந்து உருவாகும் மனநிலைக்கேற்ப முடிவெடுப்பார்கள். எந்த வகை நிர்ப்பந்தம் அவரை வளைத்தது என்று சொல்லமுடியாது. கவிஞர் பழனிபாரதி,
"வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ"
என்ற பட்டினத்தார் பாடலை,
"காடுவரை பிள்ளை
கடைசிவரை கலைஞர்"
என்று தலைகீழாய் உலுக்கி எடுத்துவிட்டார்.
"கொன்று குவித்தோரில்
குற்றுயிராய்க் கிடப்போரே
கரம்கேட்டு எழுவதற்குக்
கதறி அழுவோரே
தற்காலிகமாய் அங்கே
ஈழம்தான் உமக்கில்லை
எப்போதும் எமக்கிங்கே
ஈனமானம் எதுவுமில்லை".
ஈழப் படுகொலைக்காய் நெருப்பாய்க் கொதித்து இந்தக் கவிதையைப் எழுதிய கவிஞர் இளம்பிறை, கவியரங்கில் பங்கேற்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. வேலை போய்விடுமாம் வேலை, அதுவும் அரசு வேலையிலிருந்து ஒருவரை, முறையான விசாரணை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிட இயலுமா? அப்படியான நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாமல் ஏன் இந்தக் கவிதை எழுதினார்? அன்பின் நெருக்குதல்தான் மேடையேறச் செய்தது. அதைக் காப்பாற்ற கவியரங்கம் ஏறிய அவலநிலை பல எழுத்தாளர்களைப் போல் இவருக்கும் வாய்த்தது. அவர் எழுதிய கவிதை அவருக்கு எதிராகவே நின்றது. அவர் அனாதையாக்கிவிட்டது அவருடைய கவிதையை அல்ல. அவர் கைவிட்டது எண்ணற்ற சித்திரவதைக்குள் ஒடுங்கிய ஈழத்தமிழரை அல்ல. அவர் கைவிட்டது கொள்கையை. பெயரைச் சுட்டாமல் யாருடைய துரோகத்தைச் சுட்டிக் காட்டினாரோ, அந்தத் துரோகத்தை தன் முன்னால் வைத்துக்கொண்டு
"நானும் திருக்குவளைக்குப்
பக்கத்து ஊர்க்காரி"
என்று சொந்தம் கொண்டாடிய வேளையில் இனி அவருக்குள்ளிருந்து வரப்போகிற எல்லாக் கவிதைகளும் வேரற்றவையாய் வெளிவிழும் என்றுதான் பட்டது.
"உலகில் வேறெந்த நாடுகள் அழைத்தாலும், அல்லது நான் விரும்பினாலும் செல்வேன். எங்கள் இனத்தைச் சாய்க்க துணைபோன தமிழகத்தில் நான் காலடி வைப்பதைக் கூட பார்க்க முடியாது" என்று தமிழினப் படுகொலை முடிந்த மே 2009ன் பின் வெம்பி வெதும்பி கா.சிவத்தம்பி சொன்னதையும் முள்ளிவாய்க்கால் ரத்தக்கூடலுக்கு மேலாக நீந்தி, இப்போது கோயம்புத்தூர் வந்தடைந்ததையும் இணைத்துக் காணவேண்டும். செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கு சிவத்தம்பி வருகையை சில தீய சக்திகள் தடுக்க முயல்வதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை தந்தார். அதையும் தாண்டி அவர் வருவாரா? மாட்டாரா என்ற ஐயம் இருந்ததாக ஜூனியர் விகடன் (27.6.2010) கேள்வி எழுப்பியபோது, "நான் வரமாட்டேன் என்று யாரிடம் சொன்னேன். வருவேன் என்று யாருக்கு உறுதி அளித்தேன்? மாநாட்டு சமயத்தில் என் உடல்நலம்தான் முடிவு செய்யும் என் வருகையை" என்று சமத்காரமாகப் பதில் சொன்னார். சந்தர்ப்பவாதம், பலப்பல சமத்காரங்களுக்குள் தலைமறைத்துக்கொள்கிறது.
சிவத்தம்பி வந்துவிடக்கூடாது என்று அவரை மதிக்கிற நாங்கள் கவலை கொண்டோம். கவலைகொண்டு, அவருடன் கொழும்புவுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எப்போதும் அன்பொழுக உச்சரிக்கும் சொல் "ராசா" என்றுதான் அழைப்பார்.
"உங்களை ஆய்வரங்கத் தலைவராக முதல்வர் அறிவித்துள்ளாரே" என்று கேட்டபோது,
"அப்படியா செய்தி வந்துள்ளது? எனக்குத் தெரியாதே" என்றார்.
"உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவராகவே அறிவித்தாரா?" என்று கேட்டேன். அதற்கு, "இந்தச் சூழலில் நடத்துவது ஏற்றதல்ல என்று வி.சி.குழந்தைசாமிக்கு கடிதம் எழுதினேன்" என்றார். எங்களுடைய எதிர்பார்ப்பு என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதை விளக்கினேன். அவர் சொன்ன பதில், "மாநாடு நடக்க இன்னும் எட்டு மாதமிருக்கிறது ராசா. அதுவரை இந்த அரசியல் எதிலும் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. கவனமாக இருப்பேன். அதுவரை வாயே திறக்கப் போவதில்லை".
தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து 4.11.2009ல் அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன். உடல்நிலையைக் காரணம் காட்டி, மாநாட்டில் பங்கேற்காமல் இருக்க அவரது உறவினர் மூலம் சொல்லி அனுப்பப்பட்டுள்ளது என்று பேரா.தொ.பரமசிவன் என்னிடம் தெரிவித்தார். அதுவும் காரிய சாத்தியமாகவில்லை. பேராசிரியர் வந்தேவிட்டார்.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி, கண்காட்சி ஊரெல்லாம் அலங்காரம் என மக்களைப் போல் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைப்பவர்களாக இவர்களைக் கருத இயலாது. வேறென்ன இவர்களை ஈர்த்திருக்கும். "ஒருவனின் பிரதான எதிரி யாரென்று கேட்டால் அது தற்பெருமைதான்" என்றான் சாணக்கியன். அரசியல் சாகசங்களைக் கற்றறிந்தானோ இல்லையோ, மனிதகுண விசித்திரங்களை நன்கு படித்திருந்தான் சாணக்கியன். தற்பெருமையின் உச்சம்தான், புகழும் அங்கீகாரமும் தேடுவது. புகழும் அங்கீகாரமும் மட்டுமே இவர்களை எதைநோக்கியும் ஓடச் செய்திருக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
தமிழரை வாழவைத்துத்தான் தமிழை வாழ வைக்க முடியும். தமிழனை அழித்துவிட்டு தமிழைக் காக்க முடியாது.
"சாதியற்ற தமிழன் நாங்கள் என்று
சந்தம் பாடு
தமிழ் வளர்த்த சிங்கத் தமிழர் வாழ்கவே"
என்பது சென்னை சங்கமம் கொண்டாட்டத்துக்கு இசைக்கப்பட்ட பாடல். சிங்கத் தமிழர் இல்லை. அந்த சொந்த ரத்தத்தை தெற்கில் 26 கி.மீ. அப்பால் கொன்று கொண்டாடியாகிவிட்டது. சங்கத் தமிழன் இல்லை. சாதித் தமிழன் மட்டுமே ஆட்டம் போடுகிறான். "ரெட்டை டம்ளர்" எனும் கொடுநெருப்பை இன்னும் மடியில் கட்டிக் கொண்டிருக்கிற கிராமங்களை என்ன செய்தோம்? சாதித்தமிழர், ஆதித்தமிழர் பிளவுகளை அருகருகே காத்து வருகிறோமா, இல்லையா? தமிழினத்தின் தண்டுவடமான தலித் மக்கள் உழைத்து வாழ முடிகிறதா? தமிழக மீனவர் ஆதாரம் பறிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் அன்றாடம் உயிர் பறிக்கப்படுகிறார்கள். குற்றுயிரும் குலைஉயிருமாய் விவசாயிகள் நகரம் நோக்கி ஓடுகிறார்கள். கனிம வளங்கள் வேட்டை, காடுகள் அபரிப்பு என மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வாழ்வியலிலிருந்து அகற்றப்படுகிற மக்களிடமிருந்து மொழியும் அகற்றப்பட்டுவிடும். தர்க்கப்பூர்வமாக, தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதை சிந்தித்திருப்பாளர்களா?
தமிழனை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்வது என்பதோ, அவனுடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக ஆக்காமல், தமிழ்வாழ்க என்பதோடு தமிழை வழிபாட்டு உருவாக மட்டுமே வைத்திருக்கப் பயன்படும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்தவர் தமிழருவி மணியன். 2007ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசுக் குடியிருப்பு வீடு, பொது ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு ஒதுக்கப்பட்டது. வாடகை வீட்டுக்கான குத்தகையை 19 மாதங்களாகப் புதுப்பிக்கவில்லையென்று, வீட்டைக் காலி செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. "வீட்டு வசதிவாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்புக் கூறிய உயர்நீதிமன்ற நிதிபதி சந்ரு, தொடர்ந்து சொல்லியிருக்கிற வாசகம் முக்கியத்துவமானது, "வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தில் பெரிய அளவில் பொருத்தப்பட்ட நியான் விளக்கு பலகை உள்ளது. அதில் தமிழ் வாழ்க என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கவுரவப்படுத்தவேண்டும். தமிழ்ச் சிந்தனையாளர்களைப் பாதுகாப்பதன் மூலமே தமிழ்வாழும். அப்போதுதான் நியான் விளக்குப் பொருத்தப்பட்ட தமிழ்வாழ்க என்கிற வாசகம் மேலும் மிளிரும்" மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டோமென களிப்பில் மிதந்திருப்போருக்கு, தமிழ் வாழ்வது எப்படியென்று எடுத்துரைத்திருக்கிறார் நீதிபதி சந்ரு.
செம்மொழி மாநாட்டின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் விழுந்த அடியாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழனை அவனுடைய வீட்டிலிருந்து விரட்டி, தமிழை அவன் வாழ்விலிருந்து விரட்டியடித்த பின் மொழியையும் விரட்டிவிட்டு, 380 கோடியில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்பதும் 500 கோடிகளில் கோவை நகர மேம்பாடு என்பதும் அந்த "நியான் விளக்கு" கதைதான். கருணாநிதி தனக்காகவும் கட்சிக்காகவும் மாட்டிக்கொண்ட டிஜிட்டல் விளம்பரப் பலகையாக ஆகியிருக்கிறது மாநாடு.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு, 4.11.2009ல் சூரியதீபன் எழுதிய கடிதம்.
தோழமையுடைய பேராசிரியர் அவர்களுக்கு, தங்களின் மின்னஞ்சல் தெரியாததினாலேயே, இந்த எழுத்து அஞ்சல். செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய தங்களது கருத்துக்கள் - தங்களின் ஈரெட்டான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தங்களின் உறுதிப்பாடற்ற, ஊசலாட்டம் எங்களைத் தடுமாற்றங்களுக்கு கூட்டிச் செல்கிறது.
2002 - அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு தாங்கள் வந்திருந்தவேளை, நீங்கள் தலைமையுரை ஆற்றினீர்கள். "1920லிருந்து அரசியல் வடிவில் தமிழர்களின் உரிமைகள் பற்றி, எடுத்துக்கூறுகின்ற ஒரு குரல் காணப்படுகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பதிவே இல்லாமல் செய்யும் முயற்சி 1948லிருந்து தீவிரப்படுத்தப்பட்டது. தமிழினம் என்ற ஒன்றே இல்லாமல் செய்கிற முயற்சியின் எதிர்வினையாகவே ஈழத்தமிழர்களின் குரல் எழுந்துவரத் தொடங்கியது. தன் ஆளுமைக்குரிய மனித குணங்களைப் பெறமுடியாதபடி செயல்படுகிற ஒரு சூழலில் - நிர்ப்பந்திக்கப்படுகிற சூழலில் - அத்தளைகளிலிருந்து விடுபட மானுடத்தின் குரல் முன்னுக்குவரும். அது உலகப் பொது நியதியாகும். அது பாலஸ்தீனத்தில் கேட்கும் பிலிப்பைன்சில் கேட்கும் அமெரிக்காவில் கேட்கும். அந்தக் குரல் தமிழிலே பேசும் என்பது தவிர, இந்தக் குரலை வேறுவகையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.... இது ஈழத் தமிழர்களின் உரிமைக்கான ஒரு போராட்டமும் தேடுதலுமே தவிர இது எடுக்கும் வடிவங்களை வைத்துக்கொண்டு, அதற்கு எதிராகக் கூறப்படும் கருத்தை வைத்துக்கொண்டு, இந்த உரிமைப் போரை மதிப்பிடக்கூடாது".
தங்களின் இந்த உரையை - ஈழத்திலிருந்து நாங்கள் திரும்பியபின் நான் எழுதி வெளியான "ஈழக்கதவுகள்" நூலில் முழுமையாக எடுத்தாண்டுள்ளேன். (பக்.40,41). எனில் இந்த உரிமைப் போருக்கு எதிரான குரலில், எதிரான நிலைப்பாட்டில் 1990லிருந்து இயங்கி வருகிற ஒருவர் - உலகத் தமிழரின் அளவிலா வெறுப்பை அடைத்து மூடுவதற்கான ஒரு செயற்பாடாக செம்மொழித் தமிழ் மாநாட்டை முன்னிறுத்துகிறபோது அதில் கலந்துகொள்ளும் மனநிலை எவருக்கும் வருதல் கூடாது. கலந்துகொள்ளும் விருப்பம் எவ்வாறு தங்களிடமிருந்து வெளிப்பட்டது?
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் - என்ற முழக்கம் ஆட்சியாளருக்கு. எங்கே தமிழ், எதில் தமிழ் என்ற அவலம் மக்களுக்கு.
"தமிழ் வாழவேண்டும் தமிழன் வாழ வேண்டும் செத்துக்கொண்டிருக்கும் தமிழனை வாழவைக்கவேண்டும்" - இது 1983 படுகொலைக்குப்பின் பேசிய கருணாநிதி. இன்று தான் வாழ வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும் முதலாளியக் குடும்பமாக வாழ வேண்டும். தன் கட்சி வாழ வேண்டும் அதிகாரத்தின் உச்சத்தில், பதவிகளின் உச்சத்தில் வாழ வேண்டுமென்று சுருக்கிக் கொண்ட இன்றைய கருணாநிதி.
"கலைஞர் போன்ற சிறந்த தமிழறிஞர் முயற்சியில் நடைபெறுகிற மாநாடு" என எடுத்துரைக்கிறீர்களே, உங்களுடைய அறிவுப் புலம், புலமைச் செருக்கு கேள்விக்குள்ளாகப் படுதல் கொண்டு நாங்கள் வேதனை கொள்ளச் சம்மதமோ?
கலைஞர் கருணாநிதியின் மொழிப்பற்றை, இனப்பற்றை அவருடைய வர்க்கப்பற்று விழுங்கிவிட்டது. இன்று கருணாநிதி சாதாரண அரசியல்வாதியல்ல. அவருடைய குடும்பம் இந்தியப் பெருமுதலாளிகளுடன் ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கைத் தீவு ஒரே தீர்வாக இருப்பதுதான் முக்கியமேயன்றி, தமிழ்மக்களின் விடுதலைப் போர் அல்ல. எனவே இந்தியப் பெருமுதலாளியாகிவிட்ட கருணாநிதி - தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன அழிப்புக்குத் துணை போனார் என்பதுதானே உண்மை.
"ஈழம் - வன்மமும் அவதூறுகளும்" என்ற எனது சிறுநூலை இத்துடன் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அதில் "இந்தியத் துரோகத்தின் தமிழ்வேர்" - என்ற கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ள வேண்டுகோளையும் வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.
எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் சரி. ஐயா, உங்களைப் பற்றி வேறுபாடாக நினைக்க வைத்துவிட வேண்டாம்.
No comments:
Post a Comment